புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
காரைக்குடியில் செட்டிலா? 'மெட்டி ஒலி' பார்ட் 2 வா? |இப்ப என்ன பண்றாங்க |திருமுருகன் பகுதி 3
ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இந்த வாரம் இயக்குநர் திருமுருகன்.
டாப் கியரில் டைட்டில் சாங்
'சித்தி' க்குப் பிறகு தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் ஏரியாவில் ஒரு கலக்கு கலக்கிய தொடர் என்றால் 'மெட்டி ஒலி' யைச் சொல்லலாம். 'அம்மி அம்மி அம்மி மிதித்து' என்ற அந்த டைட்டில் சாங்குக்கு டான்ஸர் சாந்தி ஆடியதை வைத்த கண் வாங்காமல் பார்த்தவர்கள் உண்டு. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிய அந்தத் தொடர் இதுவரை ஐந்தாறு தடவைக்கு மேல் ரீ டெலிகாஸ்ட் கூட ஆகிவிட்டது. மறு ஒளிபரப்பின்போதும் சீரியலைத் தொடர்ந்து பார்த்தார்கள் ரசிகர்கள்.
நடிகர் போஸ் வெங்கட், சேத்தன், டெல்லி குமார், திருச்செல்வம் எனப் பலருக்கு இந்தத் தொடர் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது எனச் சொல்லலாம். இவர்கள் எல்லோரையும் தாண்டி இந்தத் தொடர் மூலம் ரசிகர்களிடம் ரொம்பவே நெருக்கமானவர் சீரியலை இயக்கி அதில் நடிக்கவும் செய்த திருமுருகன்.
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றைப் பொறுத்தவரை சீரியலின் இயக்குநர் ஒருவருக்குக் கிடைத்த அதிகப்படியான வரவேற்பு இவருக்குக் கிடைத்ததுதான் என்கிறார்கள்.

காரைக்குடியைச் சொந்த ஊராகக்கொண்ட திருமுருகன் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் படித்தவர். படித்து முடித்ததுமே இவரின் தந்தை சில பல லட்சங்களைக் கொடுத்து சொந்தமாக சீரியல் தயாரிக்கச் சொன்னாராம்.
அடுத்த சில மாதங்களிலேயே தூர்தர்ஷினில் இவரது முதல் சீரியல் ஒளிபரப்பானது. தொடர்ந்து விகடன் தொடரை சன் டிவிக்கு இயக்கினார். குறைந்த எண்ணிக்கையில் எபிசோடுகளைக் கொண்ட தொடர்களை இயக்கி வந்த நிலையில்தான் 'மெட்டி ஒலி' தொடர் வாய்ப்பு வந்தது.
'மெட்டி ஒலி' கதை தன்னுடைய சொந்தக் கதையே என்று அது ஒளிபரப்பாகத் தொடங்கிய நாட்களில் பேட்டி கூடத் தந்திருக்கிறார்.
தாயில்லாத ஐந்து பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய ஒரு தந்தையின் கதையே மெட்டி ஒலி. அதற்கு முன்பு வரை டைரக்ஷன், தயாரிப்பு ஆகிய ஏரியாக்கள் மீதே கவனம் செலுத்தி வந்த திருமுருகன் இந்தத் தொடரில் நடிகராகவும் களமிறங்கினார்.
அந்த ஐந்து பெண் பிள்ளைகளில் ஒருவரின் கணவராக, நல்ல மருமகனாக இவரது 'கோபி' கேரக்டர் செதுக்கப்பட்டது. விளைவு ஒரு குடும்பத்தில் ஆண்கள் உட்பட அத்தனை பேரும் உட்கார்ந்து சீரியலைப் பார்க்கத் தொடங்க, ரேட்டிங்கில் நம்பர் இன் இடத்தில் தொடர்ந்து நின்றது.
மூன்று ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகிய தொடர் ஏகப்பட்ட விருதுகளை வென்றது.

வாய்ப்புகளை மறுத்த கோபி!
'திருமுருகன் நடித்து இயக்குகிறார் என்றால் டி.ஆர்.பி.க்குக் கியாரண்டி' என்பதை நம்பிய சேனல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாய்ப்புகள் தந்தது. 'நாதஸ்வரம்', 'குலதெய்வம்', 'தேனிலவு', 'கல்யாண வீடு' ஆகிய தொடர்களைத் தந்தார்.
இவருடைய 'திரு பிக்சர்ஸ்' நிறுவனம் வேகமாக வளர்ந்தது.
''தொழில்ல அவ்வளவு நேர்த்தியை கடைப்பிடிப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டார்னா அன்னைக்கு ஷெட்யூல் முழுக்க தான் நினைச்ச மாதிரி வர்ற வரைக்கும் கிளம்பமாட்டார். ஆர்ட்டிஸ்ட்டுகளை ஜாலியா பழகி வேலை வாங்குபவர்தான். ஆனா சமயத்துல அவர் நினைச்ச மாதிரி பர்ஃபார்மன்ஸ் வரலைன்னா அவருக்குப் பயங்கரமா கோபம் வரும். சின்னத்திரை மூலமா பலருக்கும் நான் இன்னைக்குத் தெரியறேன்னா, அதுக்குக் காரணம் அவர்தான்' என்கிறார் நடிகர் சாய் சக்தி.
'இன்னொரு பெரிய நல்ல குணமும் அவர்கிட்ட இருக்குங்க. அது நன்றி உணர்வு. அன்னைக்கு அவருக்கு இருந்த மார்க்கெட்டுக்குப் பல சேனல்கள்ல இருந்து அவரைக் கூப்பிட்டாங்க. தனக்கு பேரும் புகழும் கிடைக்கக் காரணமா இருந்த சேனலை விட்டு வரமாட்டேன்'னு உறுதியா நின்னார்' என்கிறார் அவரது தொடரில் நடித்த இன்னொரு சீனியர் நடிகர்.
ஹிட் சீரியல் கொடுத்துக் கொண்டே இருந்தவர் எப்போது ஏன் பிரேக் விட்டார்? அதன் பிறகு ஏன் அவரது கம் பேக் இப்போது வரை டிவியில் இல்லை? இந்தக் கேள்வியையும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலேயே சிலரிடம் கேட்டோம்.

வரிக்காகச் சுருங்கிய டைட்டில்!
''எந்நேரமும் அழுகை, குடும்பத்தைக் கெடுக்கிற வில்லத்தனம்னு போய்க்கொண்டிருந்த சீரியல்களின் போக்கை மாற்றியதால் அதே டைப்பில் படங்கள் எடுத்தா என்னனு தோணுச்சு அவருக்கு. பரத், நாசர், வடிவேலு நடிக்க 'எம்டன் மகன்'னு முதல் படத்தை இயக்கினார். 'தமிழ்ல டைட்டில் வச்சா வரிவிலக்கு'ங்கிற விஷயம் அப்ப இருந்ததால் கடைசியில 'எம் மகன்' டைட்டில் சுருங்கிடுச்சு. ஆனாலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதனால அதே பரத் -வடிவேலு காம்பினேஷன்ல அடுத்த 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு'ங்கிற அடுத்த படத்தையும் எடுத்தார். அதுக்கப்புறம் இப்பவரை அவருடைய சினிமா கரியர் தொடர்பா இப்ப வரைக்கும் எந்தத் தகவலும் இல்லை' என்றார்கள் சிலர். திருமுருகன் சீரியல் இயக்கிய காலத்திலிருந்து இப்போது வரை அவருடன் தொடர்பிலேயே இருக்கும் வெகு சிலரிடம் பேசினோம்.
கம் பேக் இருக்கு. ஆனா?
''அடுத்த படம் எடுக்கப் போறார்னு தகவல் ஒண்ணு வந்தது. ஆனா அதை அதிகாரபூர்வமா உறுதிப்படுத்த முடியல. இதுக்கிடையில் 'மெட்டி ஒலி பார்ட் 2 ' எடுக்கப் போறதாகவும் ஒரு பேச்சு வந்தது. அதாவது முதல் பார்ட் எடுத்தப்ப அவர் தொடரை இயக்க மட்டும் செஞ்சார். இரண்டாவது சீசன்ல அவர் நடிக்க மட்டுமே செய்வார்னும் இயக்குநர் விக்ரமாதித்தன் தொடரை இயக்கப் போறார்னும் சொன்னாங்க. எந்த நேரத்துலயும் தயாரா இருங்க அழைப்பு வரலாம்'னு மெட்டி ஒலியில நடிச்ச சில ஆர்ட்டிஸ்டுகளுக்கும் தகவல் போயிருக்கு. ஆனா பிறகு என்ன நடந்துச்சோ தெரியல, அது அப்படியே இருக்கு.

இதுக்கிடையில் கடந்த வருஷம் ஜனவரி முதல் தேதி விரைவில் நல்லதொரு அறிவிப்பு வரும்னு திரு பிக்சர்ஸ் சமூக வலைதள பக்கத்துலயே போட்டிருந்தாங்க. பிறகு தமிப்புத்தாண்டு அன்னைக்கும் அதே மாதிரியானதொரு அறிவ்ப்பு வந்திச்சு. ஆனா வருஷமே முடிஞ்சு அடுத்த வருஷமும் வந்திடுச்சு. ஆனா இன்னும் அவருடைய என்ட்ரி நிகழலை. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். இப்ப அவர் கம் பேக் கொடுத்தாலும் அவருடைய சீரியலுக்கு முன்னாடி கிடைச்ச அதே வரவேற்பு நிச்சயம்கிறதை மட்டும் உறுதியாச் சொல்லலாம்' என்றார்கள் இவர்கள்.
இறுதியாகக் கிடைத்த நம்பகமான தகவல்படி தற்போது பாதி நாட்களை சில டிவி, சினிமா முயற்சிகளின் பொருட்டு சென்னையிலும் மீதி நாட்களை சொந்த ஊரான காரைக்குடியில் குடும்பத்துடனும் செலவழித்து வருகிறாராம் அவர்.
ஊரில் இருக்கும் நேரத்திலும் நேரம் கிடைத்தால், நெருக்கமான சில நண்பர்களுடன் டிவி, சினிமா தொடர்பான டிஸ்கஷனும் போகிறதாம்.
எனவே திருமுருகன் நிச்சயம் இன்டஸ்ட்ரிக்குத் திரும்புவார் என்பது மட்டும் தெரிகிறது. பார்க்கலாம்.