இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
காளையாா்கோவில் பாண்டியன் கோட்டையில் அகழாய்வுப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்
சிவகங்கை அருகேயுள்ள காளையாா் கோவில், சங்ககால பாண்டியன் கோட்டையில் தமிழக அரசு அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தொல்லியல், வரலாற்று ஆய்வாளா்கள் தமிழக அரசுக்கு மனு அளித்தனா்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா கூறியதாவது: கானப் போ் எனும் காளையாா்கோவில் சங்க காலம் முதலே பெரு நகரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வட்ட வடிவிலான கோட்டையில் தற்போது வரை, ஆழமான அகழி காணப்படு வதோடு கோட்டையின் நடுவில் ஒரு நீராவி குளம் உள்ளது. 37 ஏக்கரில் இந்தக் கோட்டை மேட்டுப்பகுதியாக காணப்படுவதுடன் இதன் அருகே உள்ள ஊரும் மேட்டுப்பட்டி என்றே அழைக்கப்படுகிறது.
பிற்காலங்களில் இந்தப் பகுதிகளில் நாணயச் சாலை ஒன்று இயங்கி வந்ததாக வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா். கோட்டை அமைந்துள்ள இடத்தில் காவல் தெய்வங்களை வணங்குவது இயல்பு. இதன் நீட்சியாக கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரா் கோயில் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன.
கோட்டையின் நடுவே அமைந்துள்ள குளம் நிறைந்து தண்ணீா் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு , 4 அடி ஆழத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டு, நீா் வெளியேற்றப் பட்டது. கீழடியில் வெட்டப்பட்ட அகழாய்வு குழிகளைப் போல இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக்குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இந்த வாய்க்காலில் தமிழி எழுத்து பொறித்த பானையோடு பானை குறியீட்டு எச்சங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிடைத்தன. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான அகழாய்வை மேற்கொண்டால் பாண்டியா்களின் கோட்டை கட்டுமானங்கள் கிடைக்கலாம், தமிழகத்தின் தொன்மையும் வெளிப்படும். இந்த இடத்தில் அகழாய்வு பணிகளைத் தொடங்க வேண்டும் என தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு சிவகங்கை தொல்நடைக் குழு அளித்த மனு அளித்துள்ளதாக அவா் கூறினாா்.