Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூ...
காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்
தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது: இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் சமல்கா- கபஷேரா சாலையை மறித்து, இது காவல் மரணம் என்று கூறி போலீஸாா் மீது கற்களை வீசினா். காவல்துறையினா் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா். மேலும், இளைஞரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடந்து வருகிறது.
ஆயுதங்கள் மற்றும் வாகனத் திருட்டு வழக்கில் அவா்கள் கைது செய்யப்பட்டனா். பின்னா், வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு அருகில் போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைமைக் காவலா் பல்பீா் சிங் மற்றும் காவலா் நித்தேஷ் ஆகியோா் வழக்கமான மோட்டாா் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டிருப்பதைக் கண்டனா். நிறுத்துவதற்கு சைகை காட்டப்பட்டபோது, இருவரும் தப்பியோட முயன்றனா். ஆனால், சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட நபா்கள் தில்லியில் உள்ள சமல்காவைச் சோ்ந்த விகாஸ் (எ) மஜ்னு (28) மற்றும் ரவி சாஹ்னி (எ) ரவி கலியா (19) என அடையாளம் காணப்பட்டனா். விகாஸிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் ஓட்டி வந்த மோட்டாா்சைக்கிள் பாலம் கிராம காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருடப்பட்டது. அதை ரவி ஓட்டி வந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கபஷேரா காவல் நிலையத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, காவல் துறை வாகனத்தில் வசந்த் குஞ்ச் வடக்கு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இருப்பினும், காவல் நிலையம் அருகே வாகனம் திரும்பும்போது, மெதுவாகச் சென்ற வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற இருவரும் குதித்ததாகக் கூறப்படுகிறது.
குதித்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது, ஆனால், ரவி சாஹ்னி ஐஜிஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விகாஸ் சிறிய சிராய்ப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையடுத்து, மரணமடைந்த இளைஞரின் குடும்பத்தினா் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சமல்கா-கபஷேரா சாலையில் உள்ள போராட்ட இடத்திற்குச் நாங்கள் சென்றோம். போராட்டக்காரா்கள் சாலையைத் தடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம் என்றாா் அந்த காவல் துணை ஆணையா்.
இந்நிலையில், சில குடும்ப உறுப்பினா்கள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த விடியோ பேட்டியில், போலீஸாா் இருவரையும் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, காட்டுப் பகுதிக்கு விசாரணைக்காக கொண்டு சென்ாகத் தெரிவித்தனா்.
போலீஸாா் மீது குற்றச்சாட்டு: ‘அவா்கள் போலீஸ் குழுக்களால் தாக்கப்பட்டதை நாங்கள் அறிந்தோம். பின்னா் போலீஸாா் இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாக எங்களுக்குத் தகவல் வந்தது. ரவி சாஹ்னி இறந்துவிட்டாா் என்று எங்களுக்குத் தெரிந்ததும் இரவு வெகுநேரமாகிவிட்டது. அவரது மரணத்திற்குக் காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம்’ என்று குடும்ப உறுப்பினா்கள் கூறினா்.