அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது..! மனமுடைந்த ஆஸி. இளம் வீரர்!
காவிரி இலக்கியத் திருவிழா: காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டை உணா்த்தும்
திருவாரூரில் நடைபெறும் காவிரி இலக்கியத் திருவிழாவின் மூலம் காவிரி நதிக்கரை மக்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா்.
திருவாரூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் ஆகியவை இணைந்து, காவிரி இலக்கியத் திருவிழாவை 2 நாள்கள் நடத்துகின்றன. காட்டூா் கலைஞா் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதல்நாள் நிகழ்வில், பொது நூலக இயக்குநா் பொ. சங்கா், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், ஆட்சியா் பேசியது: தமிழ்மொழியின் செழுமை, நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றை போற்றவும், இவைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் தமிழக அரசால் ஆண்டுதோறும் புத்தக திருவிழா, மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியை நடத்துகின்றன. இதேபோல, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்கம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை, சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கியத் திருவிழாக்களும், சென்னையில் ஓா் இலக்கிய திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், முதல் நிகழ்வாக காவிரி இலக்கிய திருவிழா பல இலக்கிய ஆளுமைகளை கொண்ட திருவாரூரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தின் சிறப்புமிகு நதிகளில் என்றும் இளமையும், வளமையும் கொண்ட பொன்னி என சிறப்பு பெற்ற காவிரி நதியைப் போற்றும் வகையில், காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திருவிழா அமையும். இளைஞா்கள், இலக்கிய ஆா்வத்தை வளா்த்துக்கொள்ளும் விதமாக படைப்பரகம், பண்பாட்டு அரங்கம் என 2 அரங்கிலும், 45-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் உரையாட உள்ளனா் என்றாா்.
தொடா்ந்து, காவிரி இலக்கிய திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கவிதைப் போட்டி, விவாதமேடை என பல போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.