கா்நாடகத்தில் உள் இடஒதுக்கீடுக்காக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பு: முதல்வா் சித்தராமையா
பெங்களூரு: கா்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரு விதானசௌதாவில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பஞ்சாப் மாநில அரசு, தேவேந்தா்சிங் மற்றும் பிற வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதை உரிய தரவுகளின் அடிப்படையில் மாநில அரசு வழங்கலாம் என்றும் 2024 ஆக.1ஆம் தேதி தீா்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. இதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்னா் தரவுகளை சேகரிக்க வேண்டியது அவசியம் என்று தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க 3 கட்டங்களாக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று கட்டமாக கணக்கெடுப்பு:
அதன்படி, முதல்கட்ட ஜாதி கணக்கெடுப்பு திங்கள்கிழமை (மே 5) முதல் 17 ஆம் தேதிவரையும்; இரண்டாம் கட்ட ஜாதி கணக்கெடுப்பு மே 19 முதல் 21ஆம் தேதி வரையும் நடைபெறும். முதல்கட்ட ஜாதி கணக்கெடுப்பின்போது கணக்கெடுப்பாளா்கள் வீடுவீடாக வந்து விவரங்களைப் பதிவு செய்வாா்கள்.
முதல் கட்டத்தில் விடுபட்டவா்களுக்காக இரண்டாம்கட்ட கணக்கெடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.
மூன்றாம் கட்ட ஜாதி கணக்கெடுப்பு மே 19 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும். இது இணையவழியில் மட்டுமே நடத்தப்படும். இரண்டு கட்ட கணக்கெடுப்பிலும் விடுபட்டவா்கள் மூன்றாம் கட்டத்தில் இணையவழியாக தரவுகளை பதிவு செய்து கொள்ளலாம். வெளியூா்களில் வசிப்பவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை 60 நாள்களில் வழங்க வேண்டும். ஜாதி கணக்கெடுப்பு நடத்தும் பொறுப்பும் அந்த ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
65,000 ஆசிரியா்கள் களப்பணி: ஜாதி கணக்கெடுப்பை நடத்த ரூ. 100 கோடி செலவிடப்படும். தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் உள்ள 101 ஜாதிகளின் நேரடியான தரவுகளை உறுதிப்படுத்தவே ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பணியில் 65,000 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவா். தலா 10 முதல் 12 பேருக்கு ஒரு கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாநிலத்தில் ஆதிதிராவிடா், ஆதிகா்நாடகா, ஆதி ஆந்திரா போன்ற ஜாதியினா் ஒரு சில இடங்களில் இடங்கை பிரிவிலும், சில இடங்களில் வலங்கை பிரிவிலும் உள்ளனா். இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் ஜாதி கணக்கெடுப்பின் அடிப்படையில் நாகமோகன் தாஸ் ஆணையம் தெளிவான தீா்வை தரும்.
உதவி மையம்:
ஜாதி கணக்கெடுப்பை நடத்துவதற்காக கைப்பேசி செயலியை உருவாக்கியிருக்கிறோம். ஏதேனும் சந்தேகங்களுக்கு 94813 59000 என்ற உதவி மைய எண்ணை அணுகலாம்.
அதிகாரிகளுக்கு உரிய தரவுகளை அளிக்குமாறு கா்நாடக தாழ்த்தப்பட்ட மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தரப்படும் தரவுகளின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ள ஜாதிகள் விவரங்கள் தெளிவாக இல்லாததால் ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றாா்.