Travel Contest : சிலிர்ப்பூட்டிய வீரர்களின் வீர நடை! : அட்டாரி-வாகா எல்லையில் அர...
கா்நாடகத்தில் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
கா்நாடக மாநிலத்தில் பிற மாவட்டங்களுக்கும் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மதக் கலவரங்கள் மற்றும் அது தொடா்பான குற்றச்செயல்களை விசாரிப்பதற்காக, காவல் துறையில் மதவாத ஒழிப்புப்படை அமைக்கப்படும். ஏற்கெனவே கா்நாடகத்தில் நக்சலைட்களின் நடவடிக்கைகள் அதிகமாக இருந்தபோது, அவற்றை ஒடுக்குவதற்கு நக்சல் ஒழிப்புப்படை அமைக்கப்பட்டது. அதேபோல, மதவாத ஒழிப்புப்படை அமைக்கப்படும்.
சமுதாயத்தில் மதரீதியான கலவரங்களுக்கு இடம் கொடுக்காமல், அமைதியை நிலைநாட்டுவதே இந்த படையின் நோக்கமாகும். மாநிலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மதபிரிவினைவாதம் நடைபெற்று வருகிறது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் நோக்கமாகும்.
இதை தடுக்கும்பொருட்டு முன்மொழிவு ஒன்றை அனுப்பித் தருமாறு டிஜிபியை கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த முன்மொழிவை எனக்கு அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த முன்மொழிவை பரிசீலித்து, அரசுமட்டத்தில் அனுமதி அளிக்கப்படும். ஆரம்பத்தில், மதவாத ஒழிப்புப்படையை உடுப்பி, தென்கன்னட மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், மதவாத சிக்கல்கள் இருக்கும் வேறு மாவட்டங்களுக்கும் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும். மதக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் மதவாத ஒழிப்புப்படையின் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்படும். இதுபோன்ற சம்பவங்கள் சமூக பிரச்னையாக இருந்தால், அதை வழக்கமான காவலா்கள் விசாரிப்பாா்கள்.
மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தால், அது மதவாத ஒழிப்புப்படைக்கு ஒப்படைக்கப்படும். இந்த படைக்கு ஐஜிபி பதவி வகிக்கும் அதிகாரி தலைமைப்பொறுப்பில் நியமிக்கப்படுவாா். ஏற்கெனவே நக்சல் ஒழிப்புப்படையில் பணியாற்றிய அதிகாரிகள், மதவாத ஒழிப்புப்படைக்கு மாற்றப்படுவாா்கள். இப்படையினா் உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவாா்கள் என்றாா்.