கிருஷ்ணகிரிக்கு தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு அக். 7-இல் வருகை
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அக். 7-ஆம் தேதி வருகை தர உள்ள தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு பயண முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழக சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவா் வேல்முருகன் தலைமையில் குழுவினா் அக். 7-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனா்.
இந்தக் குழுவினா் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளுடன் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் உறுதிமொழிக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில், மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஸ் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.