கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று காதல் ஜோடிகளை கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து 7,000 பணம், நகைகளை பறித்துள்ளது.
பணம், நகைகளை கொள்ளையிட்டதுடன், காதலனுடன் இருந்த காதலியை வலுக்கட்டாயமாக மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை, காதலன் கண்முன்னேயே செய்துள்ளது மனிதநேயமில்லாத அந்த கும்பல்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் வர, ரத்தக் காயங்களுடன் கிடந்த காதல் ஜோடிகளை மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் கிடத்தவுடன் கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்மூலம் சிசிடிவி காட்சிகள், செல்போன் டவர் லொகேஷன் போன்றவற்றை வைத்து விசாரணை தொடங்கிய தனிப்படை போலீஸார், இந்த கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டது. பிரபல ரெளடி கும்பல் என்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடிகளான கலையரசன், அபிக்ஷேக், நாராயணன், சுரேக்ஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள்மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் வட்டாரங்களில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த கும்பல் வழிப்பறி, வீடு கொள்ளையிட்டு திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தனியாக இருந்த காதல் ஜோடிகளிடம் நகை, பணத்தை பறித்ததுடன் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போலீஸார் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய ரெளடிகளான கலையரசன், அபிக்ஷேக்கினை கைது செய்துள்ள நிலையில், இன்று பொன்மலைக்குட்டை பகுதியில் தலைமறைவாக இருந்த நாராயணன், சுரேக்ஷ் ஆகியோரை பிடிக்க சென்றபோது, போலீஸாரை நோக்கி பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், 2 போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் தப்பியோட முயன்ற சுரேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காலில் குண்டு அடிப்பட்டு காயமடைந்தார். நாராயணன் கீழே தடுமாறி விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,