மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது: 40 பேர் காயம்!
கிறிஸ்துமஸ் தினத்தில் உக்ரைன் மீது தாக்குதல்; `மனிதாபிமானமற்ற செயல்'- ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்!
உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகை தினத்தன்று உக்ரைன் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளத்தில், ``ரஷ்ய அதிபர் புதின் வேண்டுமென்றே கிறித்தவப் பண்டிகையான கிறிஸ்துமஸ் தினத்தன்று, உக்ரைனின் ஆற்றல் உள்கட்டமைப்புப் பகுதிகளைத் தாக்கியுள்ளார். இதை விட மனிதாபிமானமற்றச் செயல் வேறென்ன இருக்க முடியும்? 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 100 ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியான கார்கிவ் நகரம், ரஷ்யாவின் இந்தத் தாக்குதலில் அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்திருப்பதாகவும், ஏவுகணை தாக்குதலில் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நகர மேயர் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவின் தாக்குதலை முறியடிப்பதற்காக உக்ரைன் தன்னுடைய நட்பு நாடுகளிடம், நாட்டின் வான்வழி பாதுகாப்புக்கு ஆதரவு கோரியிருக்கிறது.
ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதல் 2024-ம் ஆண்டின் 13-வது பெரிய தாக்குதல் என்று உக்ரைனின் மிகப்பெரிய ஆற்றல் நிறுவனமான DTEK நிறுவனம் தெரிவித்துள்ளது.