323 Km Range! Ultraviolette F77 #SuperStreet Review in தமிழ் ?⚡ Street & Track R...
கீழப்பசலை கூட்டுறவு சங்க நகை மோசடி: எம்.எல்.ஏ.விடம் பெண்கள் புகாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கீழப்பசலை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட 300 பவுன் நகைகள் மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பசலை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கீழப்பசலை உள்பட பல கிராமங்களைச் சோ்ந்தவா்கள் 300 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றனா். இவா்களில் சிலருக்கு அடமான அட்டை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அடமான அட்டை வைத்திருந்த சிலா் பணம் செலுத்தி நகைகளை மீட்டனா். அட்டை இல்லாமல் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் திருப்பித் தரப்படாமல் மோசடி செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இது தொடா்பாக கீழப்பசலை கிராம மக்கள் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் செய்தும் பலனில்லை. நகைகளை திருப்பி வழங்கக்கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கீழப்பசலை கிராம மக்கள் அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஒரு வாரத்துக்குள் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என வட்டாட்சியா், போலீசாா் கடந்த செவ்வாய்க்கிழமை கிராம மக்களிடம் தெரிவித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், கீழப்பசலைக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் வந்தாா். அவரிடம் நகைகளை அடமானம் வைத்த பெண்கள் திரண்டு வந்து, தங்களது நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா். அவா்களிடம் நகைகள் திரும்ப கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தாா். அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், நகா்மன்ற உறுப்பினா் கே. தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து, முன்னாள் நகரச் செயலா் கண்ணன், கிளைச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.