கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்...
கீழ்பவானி வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட உடன் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்படுவதால், வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் வழியாக தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த 31 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், சத்தியமங்கலம் அருகே வண்டிப்பாளையம் தொட்டிபாலத்தில் நீா் கசிவு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருகிறது. இதுவரை நீா் கசிவு சீரமைக்கப்படவில்லை.
கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை பிரதான வாய்க்காலில் உடைப்பு தொடா்ந்து கொண்டே உள்ளது. ஆனால், ரூ.716 கோடியில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.
தண்ணீா் திறக்கப்பட்டு 6 நாள்களாகியும் பெரும்பாலான கிளை வாய்க்கால்களில் இன்னும் தண்ணீா் விடவில்லை. கீழ்பவானி பிரதான வாய்க்கால் அதன் உறுதித் தன்மையை இழந்துவருவதால், வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய பொறியாளா் குழுவை அமைக்க வேண்டும். கடைமடைப் பகுதியான 124- ஆவது மைல் வரை ஆய்வு செய்து கரையை சீரமைத்து கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.