குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?
குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மஹிசாகர் மாவட்டத்தின், லுனாவாடா நகரத்தில் அமைந்துள்ள நீர் மின் நிலையத்தில், நேற்று (செப்.4) 15 தொழிலாளிகள் மின் நிலையத்தின் மிகப் பெரிய கிணற்றினுள் இறங்கி பரமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைந்துள்ள மாஹி ஆற்றின் மீது அமைந்துள்ள கடானா அணை திறந்தபோது வெளியேறிய நீரானது, லுனாவாடா நீர் மின் நிலையத்தினுள் புகுந்துள்ளது.
இந்த ஆற்று நீர், பரமரிப்பு பணிகள் நடைபெற்ற கிணற்றினுள் ஆற்று நீர் புகுந்தபோது, அதனுள் இருந்த தொழிலாளிகள் மூழ்கியுள்ளனர். இதையடுத்து, 10 தொழிலாளிகள் மட்டும் தப்பித்து வெளியே வந்தனர். ஆனால், மீதமுள்ள 5 தொழிலாளிகள் மாயமானதாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உடனடியாக அங்கு தொழிலாளிகளை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அவர்கள் 5 பேரது நிலைக்குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மாயமான தொழிலாளிகளை மீட்க, இன்று (செப்.5) தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இத்துடன், நீருக்கு அடியில் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வகையிலான சிறப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!