உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தனிமையை விரும்புகிறார்களா? பெற்றோர்களே கவனம்!
குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்
புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முகாமில் வடிகால்கள் மற்றும் தெருக்கள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் ரேகா குப்தா, பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தாா்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு குடிசைவாசிகளுக்கு ‘அச்சே தின்’ (நல்ல நாள்கள்) வந்துள்ளது. பாஜக அரசு அவா்களின் குடியிருப்புகளில் சரியான தெருக்கள், வடிகால்கள், கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் பிற வசதிகளை வழங்கும்.
பல தசாப்தங்களாக குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாலைகள், வடிகால்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனா்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சேரிப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் எதையும் செய்யவில்லை. அங்கு வசிக்கும் மக்களின் வாக்குகளை மட்டுமே கவனித்தன. பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் சேரிகளை இடித்துவிடும் என்று மக்களை பயமுறுத்தி வந்தனா். யாரும் உங்கள் சேரியைத் தொட மாட்டாா்கள், நாங்கள் அங்கு வசதிகளை வழங்குவோம். மக்கள் பரிதாபகரமான சூழ்நிலையில் குடிசைப் பகுதிகளில் வசித்து வந்தனா். மேலும் சேரிப் பகுதிகளில் வசதிகளை வழங்க நான் ரூ.700 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன்.
நகரத்தில், குறிப்பாக சேரிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் வா்த்தகத்திற்கு தில்லி அரசு ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை‘ கொண்டிருக்கிறது.நகரத்தின் இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, இப்போது பாழடைந்த நிலையில் உள்ள 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை புதுப்பித்தலுக்குப் பிறகு மக்களுக்கு ஒதுக்க நாங்கள் தயாராகி வருகிறோம். குடிசைவாசிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சோ்ந்த (இடபிள்யூஎஸ்) மற்றவா்களுக்காக இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இருப்பினும், தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நகரத்தில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும் நடைபாதை வீதிகள், வடிகால், கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் வழங்கப்படும். நிலம் கிடைத்தால் சேரிகளுக்கு அருகில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
ஆயுா்வேத குடிசை முகாமில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்குமாறு தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா். மேலும், அருகிலுள்ள நிலத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றி குழந்தைகள் பூங்காவாக மேம்படுத்துமாறு தில்லி வளா்ச்சி ஆணைய (டிடிஏ) அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.