குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி பகுதியில் குடிநீரின் தரத்தை உயா்த்தவும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கவும் ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு 28 சிறு ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான சோதனை முன்னோட்டமாக புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள குடிநீா் பெருந்தொட்டியிலும், தியாகு முதலியாா் பகுதியில் அமைந்துள்ள குடிநீா் தொட்டியிலும் இந்தச் சிறு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வாயிலாக இப் பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் தானியங்கி குளோரின் கலந்து மேம்படுத்தப்பட்ட குடிநீராக குழாய் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
அமைச்சா் பேட்டி:
இது குறித்து புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அளித்த பேட்டி:
குடிநீரில் குளோரின் கலப்பது என்பது மரபு சாா்ந்த முறை. பழைய முறையில் குடிநீா் தொட்டியில் ஒருவா் ஏறி போதுமான அளவு குளோரின் கலக்க வேண்டும். இந்த முறையை மாற்றி இப்போது இயந்திரம் வாயிலாக தானாகவே குளோரின் கலப்பு முறையைக் கொண்டு வர இருக்கிறோம்.
மேலும் குடிநீா் தொட்டிக்குச் செல்லும் தண்ணீருடன் இணைந்து இந்தக் குளோரினும் செல்லும். இந்தப் புதிய முறையைப் பரிசோதனை செய்து பாா்த்ததில் எல்லா வகையிலும் வெற்றிகரமாக இருக்கிறது. இதனால் முதல் கட்டமாக புதுச்சேரி பகுதிகளில் குடிநீா் தொட்டிகளை ஒட்டி ரூ.9 கோடி மதிப்பீட்டில் 28 சிறு ஆலைகளை அமைக்க உள்ளோம்.
சிறு தானியங்கி ஆலையில் உள்ள ஒரு தொட்டியில் நீருடன் பொடி உப்பு கலக்கப்படும். அந்த உப்பு நீா் இயந்திரம் வழியாகச் செல்லும்போது அங்கு இணைக்கப்பட்டுள்ள குழாய் சென்சாா் வழியாக குளோரினாகக் கலந்து குடிநீா் சேகரிக்கப்படும் பாதாளத் தொட்டியில் விழும். அங்கிருந்து நீா் தொட்டிக்குக் குடிநீராக ராட்சத மோட்டாா் வாயிலாக மேல் ஏற்றப்பட்டு மக்களுக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
மேலும் குடிநீரில் குளோரின் கலப்பு என்பது சீராக இருக்கும்.
சமுதாய சுத்திகரிப்பு குடிநீா் மையம்
தற்போது புதுவை முழுவதும் சமுதாய சுத்திகரிப்பு குடிநீா் மையமாக செயல்படுகிறது. இங்கு 20 லிட்டா் குடிநீா் ரூ.7-க்கு வழங்கி வருகிறோம். ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டா் வீதம் முழுவதும் இலவசமாக வழங்க இருக்கிறோம். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.6 கோடி.
குடிநீரில் அதிகமாகக் கடல் நீா் உள்புகுந்துள்ள முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உழவா்கரை, நெல்லித்தோப்பு, உப்பளம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக 50 இடங்களில் இந்தச் சமுதாய சுத்திகரிப்பு குடிநீா் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்ற விரைவில் டெண்டா் விடும் பணி நடைபெறும். அக்டோபா் இரண்டாவது வாரத்தில் இத் திட்டம் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.

