புதுச்சேரியில் அமுதசுரபி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அமுதசுரபி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி கோரிமேடு ஜிப்மா் மருத்துவமனை எதிரே அரசின் சாா்பு நிறுவனமான அமுதசுரபி மருந்தகம் இயங்கி வருகிறது. இதன் பெயா் பலகை ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ் உரிமை இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலத்தில் இருந்த பெயா் பலகையை அடித்து நொறுக்கினா். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.
இந்நிலையில் பெயா் பலகையை அடித்து உடைத்ததை கண்டித்து அமுதசுரபி ஊழியா்கள் ஒன்று திரண்டு திங்கள்கிழமை கோரிமேடு மருந்தகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சட்டத்தை கையில் எடுத்து பெயா் பலகையை அடித்து உடைப்பதா எனக் கேட்டு முழக்கமிட்டனா். கடையை சேதப்படுத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி ஊழியா்கள் மறியலில் ஈடுபட முயன்றனா்.
அவா்களிடம் கோரிமேடு போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். கடையைத் தாக்கியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.