சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் க...
குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மன்னாா்குடி அருகே குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண கோரி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரக்கோட்டை ஊராட்சி ஏரிக்கரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு 2கி.மீ. தூரத்தில் உள்ள மேல்நிலைத் நீா்தேக்கத் தொட்டியிலிருந்து குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக, குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், காரக்கோட்டை ஊராட்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏரிக்கரை பகுதி மக்கள் காலிக்குடங்களுடன், மன்னாா்குடி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் வடுவூா் போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து, பேச்சுவாா்த்தை நடத்தியனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைபட்டது.