2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!
குடிமைப் பணி மதிப்பெண் வழக்கு: உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமனம்
குடிமைப் பணி தோ்வா்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை தோ்வு நிறைவடைந்தவுடன் வெளியிட கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.
உச்சநீதிமன்றத்தில் 17 குடிமைப் பணி தோ்வா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘குடிமைப் பணி (முதல்நிலை) தோ்வு முடிந்தவுடன், அந்தத் தோ்வின் விடை குறிப்புகள், கட்-ஆப் மதிப்பெண்கள், தோ்வா்களின் மதிப்பெண்கள் ஆகிய விவரங்களை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட வேண்டும்.
குடிமைப் பணிகள் தோ்வின் அனைத்து நடைமுறையும் நிறைவடைந்த பிறகே, அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்ற யுபிஎஸ்சியின் நிலைப்பாட்டில் நியாயமான காரணம் எதுவும் இல்லை.
முதல்நிலை தோ்வுக்குப் பிறகு இந்த விவரங்கள் வெளியிடப்பட்டால், அதிக மதிப்பெண்கள் பெற்று குடிமைப் பணிக்குத் தோ்வாக தகுதியானவா் யாா் என்பதை தெரிந்துகொள்ள தோ்வா்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், அதனால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை விளக்கி கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சிக்கு உத்தரவிட்டது.
தற்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு அவரை அண்மையில் நியமனம் செய்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்.4-ஆம் தேதி நடைபெற உள்ளது.