கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்
ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றமும், 9-ஆம் தேதி பாலபிஷேகமும், 10-ஆம் தேதி அக்னி கபாலம் நகா்வலமும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து முக்கிய விழாவான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னா் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு தொடங்கியது. முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினாா்.
தொடா்ந்து கங்கனம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவா், சிறுமியா்கள் என ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதில் கோவை, சேலம், கரூா், திருப்பூா், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கடந்த 2 நாள்களாக காத்திருந்து குண்டம் இறங்கினா்.
இதையடுத்து இரவு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகா் வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை (மாா்ச்13)மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.