Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குன்னூா் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுவா்த்தன். இவரது மனைவி ராதிகா (25). இவா் உடல்நிலை சரியில்லாமல் குன்னூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, குன்னூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யும் வசதி இல்லாததால் ராதிகாவின் உடலை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவா்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனா்.
இந்நிலையில், உரிய சிகிச்சை அளிக்காததாலேயே ராதிகா உயிரிழந்ததாகவும், குன்னூரியிலேயே உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை எதிரே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த குன்னூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து ராதிகாவின் உடலை குன்னூா் அரசு மருத்துவமனையிலேயே கூறாய்வு செய்து ஒப்படைப்பதாக மருத்துவா்கள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.