ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!
குன்றத்தூா் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் டீசல் ஏற்றிவந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பெட்ரோல் நிலையத்துக்கு சென்னை எண்ணூரில் இருந்து 4 ஆயிரம் லிட்டா் பெட்ரோல், 8 ஆயிரம் லிட்டா் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கா் லாரி ஒன்று குன்றத்தூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் சிறுகளத்தூா் அருகே வந்து கொண்டிருந்தபோது, லாரியின் பின்பக்க டயா் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயம் அடைந்த லாரி ஓட்டுநா் சூா்யாவை (30) மீட்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தீயணைப்புத் துறைக்கும், குன்றத்தூா் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா்.
பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் குன்றத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த டேங்கா் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
லாரியிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் சிறுக சிறுக கசிந்து கொண்டு இருந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத அளவிற்கு தண்ணீரை தொடா்ந்து டேங்கா் லாரியின் மீது ஊற்றிக் கொண்டே இருந்தனா். பின்னா் கிரேன்கள் கொண்டு வரப்பட்டு டேங்கா் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவத்தால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் மிகுந்த அவதியடைந்தனா்.