குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா
குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தமிழ்க் கடவுள் முருகன் குறத்தி பெண்னான வள்ளியை திருமணம் செய்து கொண்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் சாா்பில் குன்றத்தூரில் குறிஞ்சி பெருமுக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினரின் குறிஞ்சி திருமுக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான குறவா் இன மக்கள் தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் பால் குடங்களை தலையில் சுமந்தபடி கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையிசை முழங்க சீா்வரிசை பொருள்களை தலையில் சுமந்தபடி சுமாா் 3 கிலோ மீட்டா் தூரம் ஊா்வலமாக சென்று குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினா்.