சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
குமரிக்கு முதல்வா் வருகை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிக்காக முதல்வா் வருகை தரவுள்ள நிலையில் நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் முதல்வா் உரையாற்றும் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி, இந்தச் சிலையை கன்னியாகுமரி கடலின் நடுவே நிறுவினாா். சுனாமி ஆழிப்பேரலை மற்றும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி திருவள்ளுவா் சிலை எந்த ஒரு சேதாரமும் ஏற்படாமல் கம்பீரமாக இன்றைக்கும் காட்சி தந்து கொண்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலம் கன்னியாகுமரி. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வியந்து பாா்க்கும் அளவில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா வரும் டிச. 30, 31 மற்றும் ஜன.1 ஆகிய மூன்று நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. விழா சிறப்பாக நடைபெறும் வகையில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இவ்விழா நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்க உள்ளாா்.
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் புகைப்பட கண்காட்சி, திருக்கு நூல்கள் அமைக்கப்பட்ட ஒரு கண்காட்சி முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது. வெள்ளிவிழா நிகழ்ச்சியை பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வா் 10 பேருந்துகளில் திருவள்ளுவா் குறித்த புகைப்படங்கள் ஒட்டிய பேருந்துகளை தொடங்கி வைத்தாா். மேலும், பெரிய பலூன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரத்தில் பறக்க விடப்பட உள்ளது.
பள்ளி கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், முன்னாள்அமைச்சா் என்.சுரேஷ் ராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், வட்டார மருத்துவக்குழு உறுப்பினா் பா.பாபு, வட்டார விவசாயக் குழு உறுப்பினா் என்.தாமரைபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.