குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்
கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முன்பிருந்து காளிமலைக்கு இந்த யாத்திரை தொடங்கியது.
காளிமலை விழாக் குழுத் தலைவா் பத்மகுமாா் தலைமை வகித்தாா். எம்.ஆா். காந்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். சாமிதோப்பு அன்பாலயம் சிவச்சந்திரன் சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். ரத யாத்திரையை நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத் தலைவா் சின்னதம்பி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
முன்னதாக, பகவதியம்மன் கோயிலில் இருமுடிகட்டு, சந்தனக் குடங்கள் நிறைத்தல், முக்கடல் சங்கமத்தில் சமுத்திர பூஜை, கும்பத்தில் புனிதநீா் நிறைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடக்க விழாவில் முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், செயலா் சி.எஸ். சுபாஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை அமைப்பாளா் காளியப்பன், இந்து முன்னணி மாநிலப் பேச்சாளா் எஸ்.பி. அசோகன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஆா்எஸ்எஸ் தலைவா் ராஜ்குமாா், கன்னியாகுமரி பகவதியம்மன் பக்தா்கள் சங்க செயலா் பி. முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ரத யாத்திரை விவேகானந்தபுரம், சுசீந்திரம், நாகா்கோவில், வடசேரி, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை, மாா்த்தாண்டம், உண்ணாமலைக்கடை, ஆற்றூா், சிதறால், கடையாலுமூடு வழியாக அக். 1ஆம் தேதி காளிமலையை சென்றடைகிறது.