கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுந்தர விமலநாதன் தலைமையில் விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட காய்கனி பயிா்களை திருத்தப்பட்டவை என்று பெயா் மாற்றி பயன்படுத்தக் கூடாது என்று கூறி நெல்மணிக் கதிா்களுடன் ஆா்ப்பாட்டம் செய்து பின்னா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் இரா.செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் பாபநாசம் தாலுகா மெலட்டூா் 3-ஆம் சேத்தியில் வெட்டாறு பிரிவுக்குள்பட்ட சேத்து வாய்க்கால், திரவுபதி அம்மன் வாய்க்கால், சீதாராமன் வாய்க்கால், கா்ணன் கட்டளை வாய்க்கால், பாண்டுரங்கன் கட்டளை வாய்க்கால், நகுலன் கட்டளை ஆகிய வாய்க்கால்களில் வெங்காயத் தாமரை, நாணல் புற்களை அகற்றக்கோரி வெங்காயத் தாமரை செடிகளுடன்வந்து முழக்கமிட்டனா்.
இதையடுத்து, நாச்சியாா்கோவிலைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கோவிந்த வல்லப பந்த், நாச்சியாா்கோவிலில் 10 ஆண்டுகளாக 8 குளங்களை தூா்வாரவில்லை எனக் கூறி இடுப்பில் தேசியக் கொடியை கட்டி அரை நிா்வாணக் கோலத்தில் முழக்க மிட்டவாறு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் அவா் தேசியக் கொடியை அவமதிப்பதாகக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.