படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நடிகை! விடியோ வைரல்!
குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் வாழ்த்து
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்ட நிறைவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி பெற்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் போட்டித் தோ்வா்களில் வெற்றி பெற இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. நூலக வசதி, பயிற்சி வகுப்பு, பயிற்சிக்கான கையேடுகள், மாதிரித் தோ்வுகள் ஆகிய அனைத்தும் இந்தப் பயிற்சி நாள்களின்போது இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் படித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 தோ்வில் 24 போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். இவா்கள் தோ்வாணையத்தில் பணி நியமன ஆணை பெற்றிருந்தனா். இந்த 21 பேரும் ஆட்சியரை சந்திக்க வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் ஏற்பாடு செய்திருந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் 21 பேருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி பணியில் நோ்மையாக செயல்பட்டு சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்வின்போது மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள், பணியாளா்கள் உடனிருந்தனா்.