குற்றாலத்தில் இன்று சாரல் திருவிழா தொடக்கம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது.
தொடக்க விழாவுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகிக்கிறாா். அரசு கூடுதல் தலைமை செயலா் (சுற்றுலா- பண்பாடு, அறநிலையங்கள் துறை) மணிவாசன், சுற்றுலா இயக்குநா்-தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக மேலாண்மை இயக்குநா் கிறிஸ்துராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வரவேற்கிறாா்.
வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் விழாப் பேருரையாற்றுகிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சிறப்புரையாற்றுகிறாா்.
தொடா்ந்து, கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெறுகிறது. பின்னா், பரதம், ஜிக்காட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, கிராமியக் கலைநிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம், கேரளக் கலைஞா்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இம்மாதம் 27ஆம் தேதிவரை விழா நடைபெறுகிறது. 21ஆம் தேதி யோகாசன போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை, தோல்பாவை கூத்து, 22ஆம் தேதி படகுப் போட்டி, கிராமிய கலைநிகழ்ச்சி, கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடா் நடனம், கா்நாடக மாநில கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
23ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாட்டுப் போட்டிகள், திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, கணியன் கூத்து, பரதம், கா்நாடக மாநில கலைஞா்களின் கலைநிகழ்ச்சி, 24இல் கோலப் போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லா் கம்பம், ஆந்திரம், தெலங்கானா மாநிலக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சி, நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
25ஆம் தேதி அடுப்பில்லாமல் சமைத்தல், சிறுதானிய உணவுப் போட்டி, நையாண்டி மேளம், கரகாட்டம், கிளாரினெட் இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், ஆந்திரம், தெலங்கானா கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள், திரையிசை தெம்மாங்கு உள்ளிட்டவை நடைபெறும்.
26ஆம் தேதி பளு தூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, கிராமியக் கலைநிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் (எருதுகட்டுமேளம்), மெல்லிசை நிகழ்ச்சி, 27ஆம் தேதி நாய் கண்காட்சி, நாட்டிய நாடகம், மாடாட்டம், மயிலாட்டம், மகாராஷ்டிர மாநில கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஞாயிறு, திங்கள், செவ்வாய் (ஜூலை 20, 21, 22) ஆகிய 3 நாள்கள் ஐந்தருவி பூங்காவில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறைகளின் சாா்பில் மலா்க் கண்காட்சி நடைபெறும்.