பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
குளித்தலை: வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி பணம், நகை கொள்ளை; பள்ளி தாளாளர் வீட்டில் பயங்கரம்
பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி, இவரது மனைவி சாவித்திரி.
கருணாநிதி குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர், ஒரு மணி அளவில் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். மேலும், அவரது வீட்டில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பகுதி வழியாக முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்.

ரூ.9 லட்சம் பணம், 32 பவுன் தங்க நகை கொள்ளை
அப்போது, அவர்களின் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் இளைய மகளான பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தபோது, அங்கு மூன்று இளம் வயது கொண்ட மர்ம நபர்கள் கத்தி, அரிவாளால் சகிதம் நின்றுள்ளனர்.
அதோடு, அவர்களை மிரட்டி தாக்கி ரூ.9 லட்சம் பணம் மற்றும் 32 பவுன் தங்க நகைகளை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதோடு, இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த மூவரின் செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
குற்றச் சம்பவ பின்னணி - போலீசார் விசாரணை
இதில் பல் மருத்துவர் அபர்ணா மற்றும் அவரை அரிவாளால் தாக்க முயன்ற போது தடுக்க வந்த அவரது தாய் சாவித்திரி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதனால், அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா மற்றும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பணம், மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டனர். இதில், மோப்பநாய் லக்கி சம்பவ இடத்திலிருந்து குளித்தலை - மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.
இதற்கிடையில், ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோகைமலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளம் வயது ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு குற்றச் சம்பவ பின்னணியில் உள்ள அவர்களின் கூட்டாளிகள் பலரும் இப்பகுதியில் பதுங்கி இருந்து சம்பவத்தை செய்து இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
இதனால், கொள்ளை நடந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி மற்றும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் உள்ள வீட்டில் அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.