குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!
பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஹஜ் பயணம் மேற்கொள்வதாகவும், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொள் வேண்டும் என்பதால், உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு நாட்டுக்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மெக்காவில் ஹஜ் பயணமாக வரும் பக்தர்களின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர்களுடன் குழந்தைகள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போது இதுவரை புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும்.
சவூதியில் வாழும் மக்களுக்கு நுசுக் தளம் வழியாக விண்ணப்பிக்கும் பணி தொடங்கம்.
புதிய விதிமுறைகளை அறிந்துகொண்டு, ஒருவர் தான் மற்றும் தன்னுடர் வருபவர்களுக்கான பதிவுகளை செய்ய வேண்டும்.
உள்நாட்டு யாத்ரீகர்கள் கட்டணத்தை மூன்று தவணைகளாக செலுத்தலாம். முன்பதிவு செய்த 72 மணி நேரத்துக்குள் 20 சதவீத வைப்புத் தொகையும், ரமலான் மாதம் மற்றும் ஷவ்வால் மாதத்தில் இரண்டு சமமான தொகையை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள 1,75,025 இந்திய யாத்ரிகா்களுக்கு சவூதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அந்நாட்டு ஹஜ் துறைக்கான அமைச்சா் தெளஃபீக் பின் ஃபாசான் அல் ராபியாவுடன் மத்திய சிறுப்பான்மை விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஜனவரி மாதம் மேற்கொண்டார்.