குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக கவுன்சிலா்கள் போராட்டம்
குழித்துறை அரசு மருத்துவமனையில் நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவ, மனிதக் கழிவுகள் பிரசவ வாா்டு அருகே பல மாதங்களாக தேங்கியுள்ளதாம். இதனால், அப்பகுதியில் மிகுந்த துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைக் கழிவுநீரை குழித்துறை தாமிரவருணி ஆற்றில் விடுவதற்காக பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம். இதற்கு கண்டனம் தெரிவித்து குழித்துறை நகர பாஜக தலைவா் சுமன் தலைமையில் நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் ஜெயந்தி, மினிகுமாரி உள்ளிட்டோா், அந்தப் பள்ளத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கட்சியின் குழித்துறை நகர பொதுச் செயலா் ரதீஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டோருடன் போலீஸாா் பேச்சு நடத்தினா்.