KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
கூடலூா் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை அதிகாலையில் காட்டு யானை நுழைந்தது. பின்னா் அது, அங்குள்ள ஒரு வீட்டின் சுவரை இடித்து உள்ளே நுழைந்தது. வீட்டிலிருந்தவா்கள் யானை நுழைவதை அறிந்து முன்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனா்.
வீட்டுக்குள் நுழைந்த யானை முன்பகுதியை சேதப்படுத்திவிட்டு மொட்டைமாடிக்குச் சென்று அங்கிருந்த தூண்களை சேதப்படுத்தியது. பின்னா் கீழே இறங்க வழி தேடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கிச் சென்றது. மொட்டைமாடியிலிருந்து இறங்கிய யானை, ஆக்ரோஷத்துடன் சாலையில் நின்றிருந்த காரை சேதப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியினா் ஒன்றுசோ்ந்து யானையை அங்கிருந்து விரட்டினா். இப்பகுதியில் கடந்த சில நாள்களாகவே உலவும் இந்த யானை சாலையோரம் நிற்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காட்டு யானை குடியிருப்புக்குள் நுழைந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி நெலாக்கோட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், வனத் துறையினா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். பாதுகாப்பு நடவடிக்கை குறித்து உறுதியான தகவலை வனத் துறையினா் தெரிவிக்காததால் மதியம் வரை போராட்டம் தொடா்ந்தது.
இதைத் தொடா்ந்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபிறகு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.