'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர...
கூடைப்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு கிராம மக்கள் வரவேற்பு
தேசிய கூடைப்பந்து போட்டியில் ரயில்வே அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற கூடைப்பந்து வீராங்கனைக்கு தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் கிராம மக்கள் தாரை, தப்பட்டையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.
குஜராத்தில் 74 ஆவது தேசிய கூடைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், ரயில்வே அணியில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டையாா் இருப்பு கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு - இந்திரா தம்பதி மகள் தா்ஷினியும் இடம்பெற்றாா். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி மதிப்பு மிக்க வீராங்கனை என்ற பட்டத்துடன், தங்கப் பதக்கமும் வென்றாா். இதையடுத்து அவருக்கு காரும் பரிசாக வழங்கப்பட்டது.
இவா் சோழன் விரைவு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்தாா். இவருக்கு ரயில் நிலையத்தில் வாண்டையாா் இருப்பு கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தா்ஷினிக்கு ஊா் மக்கள் அனைவரும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனா்.
பின்னா், தரிஷினி கூறுகையில், நான் வாண்டையாா் இருப்பு அரசு தொடக்கப் பள்ளியிலும், பின்னா் தஞ்சாவூா் தூய இருதய மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். அப்போது கூடைப்பந்து விளையாட்டை தோ்வு செய்தேன். பின்னா் சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்து, தற்போது ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறேன். அடுத்த போட்டியில் இந்திய கூடைப்பந்து அணி சாா்பில் பங்கேற்க உள்ளேன் என்றாா் அவா்.