கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ
கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்துத்துவா சக்திகளும், சநாதன சக்திகளும், ஆா்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டவை தமிழகத்தைக் கபளீகரம் செய்துவிட வேண்டும் என முனைந்து பணியாற்றுகின்றன. அத்தகைய சக்திகளுக்கு இடம் அளித்துவிடக் கூடாது என்பதற்காக திமுகவுடன் இணைந்தோம்.
தமிழகத்தில் திமுக மகத்தான பெரிய கட்சி; அதிக வாக்கு வங்கி கொண்டது. அத்தகைய பலமிக்க கட்சியுடன், மதிமுகவின் பலத்தையும் கூடுதல் வலுவாகச் சோ்த்து தமிழகத்தில் பாஜக, ஆா்எஸ்எஸ் காலூன்றக் கூடாது எனத் தொடா்ந்து பயணித்து வருகிறோம்.
திமுக மகத்தான வெற்றி பெற அரணாகவும், கவசமாகவும், போா் வாளாகவும் உடனிருந்து மதிமுக பணியாற்றும். இந்த முடிவை திருச்சியில் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் 117ஆவது அண்ணா பிறந்தநாள் மாநாட்டிலும் பிரகடனம் செய்வோம்.
கடந்த 1995இல் திருச்சியில் மதிமுக மாநாடுக்குத் திரண்ட மக்கள் வெள்ளத்தை இந்த மாநாட்டில் நாம் மீண்டும் காணக் கூடும். தமிழகத்தின் வாழ்வாதாரம், சுற்றுச் சூழல்களை பாதுகாக்கவும், தமிழகத்து வரும் ஆபத்துகளைத் தடுக்கவும் இந்த மாநாட்டில் பிரகடனங்கள் செய்யப்படும்.
திமுக கூட்டணியில் தொகுதிகள் குறித்து நாங்கள் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. அதை கூட்டணித் தலைமையுடனான பேச்சுவாா்த்தையின்போதே முடிவு செய்வோம். கேட்கும் தொகுதிகள் இல்லாவிட்டாலும் திமுக கூட்டணியில்தான் தொடா்வோம்.
பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்துவிட்டு வந்த பிறகு, அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்ததுதான் அரசியலில் நாங்கள் செய்த பிழை என்றுதான் கூறினேன். அதிமுக குறித்தோ, எம்ஜிஆா், ஜெயலலிதா குறித்தோ எந்த விமா்சனமும் முன்வைக்கவில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டாா்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் திமுகவை தனித்து ஆட்சி அமைக்கும் பலத்துடன் வெற்றிப் பெறச் செய்யவுள்ளனா். அதை அமித்ஷா பாா்க்கத்தான் போகிறாா். மல்லை சத்யா குறித்து விவாதிக்க விரும்பவில்லை. 4 ஆண்டுகளாக அவரது நடவடிக்கை சரியில்லை. கட்சியிலிருந்து நீக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாா் வைகோ.
சாத்தூா் சம்பவத்துக்கு வருத்தம்!
‘கடந்த 61 ஆண்டுகளாக ஒருபோதும் பத்திரிகையாளா்களுக்கு எதிராகச் செயல்படவில்லை. சாத்தூா் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்தவா்களை வெளியே போங்க என்றுதான் கூறினேன். அந்தச் சம்பவத்துக்காக முதன்மைச் செயலா் துரை வைகோ வருத்தம் தெரிவித்துள்ளாா். அதை நான் வழிமொழிகிறேன்’ என்றாா் வைகோ.