கூட்டத்தை விட்டு எப்போது வெளியேற வேண்டும்? - அபாயத்தைத் தவிர்க்க, உயிர் காக்கும் எச்சரிக்கைகள்!
கரூர் சம்பவத்தையொட்டி, தவெக தலைவர் விஜய்யை ஆரம்பித்து, ஆளும் கட்சியினரை, வேடிக்கைப் பார்க்கச் சென்ற மக்களை என அனைவரையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்த சம்பவத்தில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் இரண்டு இருக்கின்றன.

இதுதான் வாய்ப்பு என ஆபாச வார்த்தைகளைக் கொட்டுபவர்களைப் புறந்தள்ளிவிட்டு, இத்தனை உயிர்கள் மூச்சுவிட முடியாமல், கூட்டத்தினரின் கால்களில் மிதிபட்டு அநியாயமாக உயிரிழந்துவிட்டார்களே என்கிற ஆற்றாமையில் ஆத்திரப்படுபவர்களின் வார்த்தைகளில் இருக்கிற 'வருமுன் காக்கும்' வரிகளை நாம் அனைவரும் எடுத்துக்கொள்வோம். அதுதான் இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும்.
ஏனென்றால், எந்தவோர் அரசியல் கட்சிக் கூட்டங்களைவிடவும், இசைக்கச்சேரிகளைவிடவும், சினிமாக்களின் முதல் நாள் முதல் காட்சிகளைவிடவும், கிரிக்கெட் வெற்றி விழாக் கொண்டாட்டங்களைவிடவும், விமான சாகச நிகழ்ச்சிகளைவிடவும் நம் உயிர் முக்கியமானது. இது முதல் பாடம்.
இரண்டாவது பாடம், இப்படியொரு கூட்டத்துக்குச் சென்றுவிட்டீர்களென்றால், உங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? அதுபற்றி சொல்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா.
நீங்கள் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருக்கிறீர்கள் என்றால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்க வேண்டும். யதார்த்தமாக உங்கள் மீது படுவதென்பது வேறு; அதிகரிக்கிற கூட்டம் காரணமாக உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைத் தொட்டுக்கொண்டே நிற்பது என்பது வேறு. ஒரு கூட்டத்தில் இந்த சூழ்நிலை ஏற்பட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு கிளம்பி விடுவதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு.
இந்தச் சூழலையும் அலட்சியப்படுத்தி நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அடிக்கடி உங்கள் மீது மோதிக்கொண்டிருக்கிறார்கள், அது உங்கள் உயிர் பறிக்கும் ஆபத்தான கூட்டமாக மாற வாய்ப்புள்ளது.
அடுத்த நொடியே கூட்ட நெரிசல் குறைவாக இருக்கிற இடம் நோக்கி நகர ஆரம்பியுங்கள். இதுதான் உங்கள் உயிருக்கு பாதுகாப்பு.
இந்தச் சூழலையும் அலட்சியப்படுத்தலாமா என்று யோசிக்கிறீர்கள் என்றால், குனிந்து உங்கள் கால்களைத் தொடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
நெரிசல் காரணமாக இது உங்களால் முடியவில்லை என்றால், வெகு சீக்கிரமே அந்தக் கூட்டம் நெருக்கடி நிலையை எட்டவுள்ளது என்று பொருள். இனியும் தாமதிப்பது புத்திசாலித்தனமாக இருக்க முடியாது.

இப்படியோர் ஆபத்தில் சிக்கிக்கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு மிக அருகில் இருக்கிற கூட்டம் செல்கிற திசையை தவிர்த்துவிட்டு, மேடான பகுதியை நோக்கியோ அல்லது கார், மரத்தை நோக்கியோ நகர ஆரம்பியுங்கள்.
இப்படி நகர்கையில், கைகளை பாக்சிங் செய்வதுபோல நெஞ்சுக்கு முன்னால் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு நகருங்கள். இதன் மூலம் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் நிற்கும் திசையில் தடுப்புச்சுவர், தூண்கள் போல ஏதேனும் இருந்தால் அவற்றை விட்டு விலகியே இருங்கள். இப்படி அசையமுடியாத இடத்தில் சிக்கிக்கொண்டால், நெஞ்சுப்பகுதியைச் சுற்றியிருக்கும் கூட்டத்தால் நெரிக்கப்பட்டு மூச்சுவிட இயலாமல் இறக்கும் வாய்ப்பு அதிகம், கவனம்.
ஒரு கூட்டத்துக்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், அந்தப் பகுதியை விட்டு வெளியேறும் பாதைகள், சின்னச் சின்னத் தெருக்கள், திடீர் நெரிசல் ஏற்பட்டால் எதன் மீது ஏறித் தப்பிக்க முடியும்; எந்தப் பாதையை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே மனதளவில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
இதுபோன்ற திடீர் நெரிசலில், மொத்தக் கூட்டமும் ஒரே பாதை வழியாகவே வெளியேற முண்டியடிக்கும். அதே நேரத்தில், இன்னும் சில பாதைகளில் ஆட்கள் குறைவாக இருப்பார்கள்.
நான் சொன்னபடி, பல வழிகளையும் முன்கூட்டியே கவனித்து வைத்துக்கொண்டீர்களென்றால், ஆபத்தில் உதவும்.
கூட்ட நெரிசலில் கீழே விழுவதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய உயிர் ஆபத்து. அதனால், கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டீர்களென்றால், உங்கள் கால்கள் தரையிலேயே இருக்கிறபடி மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டும்.
உதாரணத்துக்கு, மழை வெள்ள நாட்களில் வெளியே வந்துவிட்டால், பள்ளம், மேடு தெரியாது என்பதால் ஊர்ந்து செல்வதுபோல கால்களை வைத்து நீருக்குள் நடப்போம் இல்லையா..? அதுபோலதான் நெரிசலில் சிக்கிக்கொண்டால் நடக்க வேண்டும். அப்போதுதான் விழாமல் இருப்பீர்கள்.

ஒருவேளை கூட்ட நெரிசலில் கீழே விழுந்து விட்டீர்களென்றால், கருப்பைக்குள் இருக்கிற சிசுபோல தலையை உள்நோக்கி வைத்து மடங்கி, சுருண்டு படுத்துக்கொள்ள வேண்டும். இது மிதித்துக்கொண்டு ஓடுபவர்களிடமிருந்து உங்கள் தலைப்பகுதியையும், நெஞ்சுப்பகுதியையும் காக்கும்.
நெரிசலால் மரணம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், மூச்சுத்திணறல்தான். அதனால், கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டவர்கள் பத்து நொடிகளுக்கு மேல் மூச்சு விடாமலோ நாடித்துடிப்பு இல்லாமலோ இருந்தால் நான்கு நிமிடங்களுக்குள் சிபிஆர் (இதயத்துடிப்பு மற்றும் மூச்சை மீட்டல்) முதலுதவி தரப்பட வேண்டும்.
இதுவரை நான் சொன்ன எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிற கூட்டங்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நெரிசல் ஏற்படக்கூடிய கூட்டங்களைத் தவிர்ப்பது மட்டுமே அவர்களுடைய இன்னுயிரைக் காக்கும்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
நம் உயிரையும், நம் வீட்டினரின் உயிரையும் காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மற்ற எல்லோரையும்விட நமக்குத்தானே அதிகமாக இருக்க வேண்டும்..!