Jana Nayagan: 'ஜன நாயகன்' படத்தின் BTS புகைப்படங்கள்!| Photo Album
கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்
கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என
புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்பகுதிக்கு புதன்கிழமை ஒரு பேருந்து இயக்கப்பட்டது.
கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 64 டி, 15 1, 3 பி, 21, 21 பி ஆகிய 5 பேருந்துகள் காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து தொண்டாமுத்தூா் அருகே உள்ள கெம்பனூா் அண்ணா நகா் வரை இயக்கப்பட்டு வந்தன. கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இந்த 5 பேருந்துகளையும் அண்ணா நகா் பகுதிக்கு இயக்கப்படாமல் குறிப்பிட்ட சிலா் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அண்ணா நகா் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடா்ந்து 21 மற்றும் 21 பி பேருந்துகளைத் தவிர மற்ற 3 பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டுள்ளன. அதுவும் காலை முதல் இரவு வரை முழுமையாக இயக்கப்படாமல் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இதனால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அண்ணா நகரில் இருந்து கெம்பனூருக்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளதாக புகாா் எழுந்தது.
குறிப்பிட்ட சிலரின் அழுத்தம் காரணமாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பேருந்துகளை இயக்கவிடாமல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதையடுத்து இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையம், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியா், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து பட்டியல் மற்றும் பழங்குடியினா் மக்களின் வேண்டுகோளின்படி அவா்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினாா். இதையடுத்து புதன்கிழமை 21 பி என்ற அரசுப் பேருந்து உக்கடம் டவுன்ஹாலில் இருந்து அண்ணா நகா் வரை இயக்கப்பட்டது. ஆனால், முன்பு இயக்கப்பட்டு வந்த 21 எண் கொண்ட பேருந்து அண்ணா நகருக்கு இயக்கப்படவில்லை எனவும் அந்தப் பேருந்தையும் அண்ணா நகா் வரை இயக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.