தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!
Lokah: க்யூட்டான காதலி `டு' லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!
மலையாள திரைப்படங்கள் மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவது இது முதன்முறை அல்ல. ஆனால் அந்த வரிசையில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது லோகா சாப்டர் 1: சந்திரா.
இந்த படத்தின் காட்சியமைப்பும், கதை சொல்லும் விதமும் தரமும் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது.
மின்னல் முரளி என்ற அட்டகாசமான சூப்பர் ஹீரோ படத்துக்குப் பிறகு, தங்கள் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்துள்ளது மலையாளம் சினிமா.

லோகா 100 கோடி வசூல் செய்த முதல் தென்னிந்திய பெண் மையத் திரைப்படம். சந்திராவாக சாதித்து காட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்!
கல்யாணி பிரியதர்ஷனை தெரியுமா?
கேரளத்தில் பெருமளவில் கொண்டாடப்பட்ட சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது தந்தை பிரியதர்ஷன் மோகன்லால், மம்முட்டியை இயக்கி வெற்றிப்படங்கள் வழங்கியவர். தாய் லிஸ்ஸி லக்ஷ்மி தமிழ், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை.
கல்யாணியின் சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்ப பின்னணியே அவருக்கு பல வசதிகளை வழங்கியிருக்கும் என்பதுடன் அதைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தையும் கொடுத்திருக்கும். பிருத்விராஜ், ஃபஹத் பாசில் வரிசையில் இரண்டாம் தலைமுறை சினிமாக்காரராக கலக்கி வருகிறார் கல்யாணி.

கல்யாணியின் பெற்றோர் அவரும் சினிமாவில் கால்பதிக்க வேண்டுமென நினைக்கவில்லை. சினிமாவில் ஜொலிக்க கடினமாகவும் அப்ரபணிப்புடனும் உழைக்க வேண்டியிருக்கும் என்பதனால் அவர்கள் தயங்கியதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள பர்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் கட்டடக்கலை வடிவமைப்பாளர் (architecture) பட்டம் பெற்றார். அது உலகிலேயே சிறந்த கட்டடக்கலை கல்லூரி எனப் போற்றப்படும் வளாகம். அமெரிக்காவில் இருக்கும்போதே டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் கல்யாணி.
வித்தியாசமான கதைகள், விவேகமான நடிப்பு!
2017ம் ஆண்டு தனது 24 வயதில் ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்தார் கல்யாணி. அகில் அக்கினேனியுடன் நடித்த அந்த படம் வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கல்யாணியின் நடிப்பு பேசப்பட்டது. சிறந்த அறிமுகத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார்.

தமிழில் அவர் நடித்த ஹீரோ திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், மாநாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மெஹரசைலா பாடலுக்கு அவரது க்யூட்டான நடனம் ரசிகர்கள மெச்சப்பட்டது.
மலையாளத்தில் கல்யாணியின் முதல் படம் வரனே அவஷ்யமுண்ட். துல்கர் சல்மான் தயாரிப்பில், துல்கர் உடன் இணைந்து நடித்தார் கல்யாணி. அதில் சுரேஷ் கோபியும் சோபனாவும் முதன்மைக் கதாபாத்திரங்கள். கல்யாணியை தங்கள் வீட்டு பெண்ணாக வரவேற்றது மல்லுவுட்.
திரைத்துறைகளைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் கல்யாணியின் முகம் பரிட்சயமானதும் வால் பேப்பரானதும் ஹிருதயம் படத்தின் மூலம்தான். எல்லா ஆண்களும் தவமிருக்கும் ஒரு காதலி பாத்திரத்தை கட்சிதமாக கைப்பற்றியிருப்பார் கல்யாணி. பிறகு ஸ்டைலிஷான தல்லுமாலா! பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் ஜோடி போடுவது மட்டுமே நடிகைகள் வளர வழி இல்லை என, இவரது கதைத் தேர்வுகள் நம்பிக்கை அளித்தன. புரோ டாடி, சித்ரலகரி படங்களில் வித்தியாசம் காட்டினார்.

மலையாள சினிமாவுக்கு இது மற்றொரு நன்னாள்!
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது லோகா ஒரு சுயாதீன படமாக தொடங்கப்பட்டது என்றார் தயாரிப்பாளர் துல்கர் சல்மான். இப்போது அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா வரை நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவைக் கொண்டாடுகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புகளில் பணிவுடன் அமர்ந்து ஒரு வரியில் பதில் சொல்லும் கல்யாணியின் நடிப்புதான் பேசுகிறது, பேச வைக்கிறது.
மலையாள சினிமாவுக்கு லோகா, ககனாசாரி போல, ஜல்லிக்கட்டு போல மற்றுமொரு வித்தியாசமான சுவாரஸ்யமான திரைப்படம். கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. ஜூனு முதல் சந்திரா வரை தன் தனி வழியில் பயணிக்கிறார் கல்யாணி!