Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது?
மலையாள சினிமாவுக்கு இந்த வாரம் ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடித்திருக்கும் 'லோகா - சாப்டர் 1: சந்திரா', ஃபகத் ஃபாஸில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கும் 'ஓடும் குதிரை சாடும் குதிரை', மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்திருக்கும் 'ஹ்ருதயபூர்வம்' போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படைப்புகள் திரைக்கு வந்திருக்கின்றன.

இதில் இரண்டு படங்களில் கல்யாணி ப்ரியதர்ஷன் தான் கதாநாயகியாக இருக்கிறார்.
இந்த மூன்று திரைப்படங்களும் எப்படி இருக்கின்றன என்ற விமர்சனத்தைப் பார்ப்போமா...
லோகா - சாப்டர் 1: சந்திரா:
மலையாள சினிமாவில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ யூனிவர்ஸ் கட்டமைக்கும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் துல்கர் சல்மான். அவருடைய தயாரிப்பில் இயக்குநர் டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென், சாண்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ திரைப்படம் ஓணம் ட்ரீட்டாக கடந்த வியாழக்கிழமை திரைக்கு வந்தது.
அப்பாவித்தனம் நிறைந்த உடல்மொழியில் சிரிக்க வைக்கும் நஸ்லென், ஃபேண்டஸி ஆக்ஷன் களத்திற்கு கணகச்சிதமாக தன்னைத் தகவமைத்துக் கொண்ட கல்யாணி ப்ரியதர்ஷன், பெண்களை வெறுக்கும் கொடூரமான வில்லனாக மிரட்டும் சாண்டி என மூவரும் கொடுத்திருப்பது மிரட்டல் நடிப்பு!

யூனிவர்ஸை அடுத்தடுத்து பெரிதாக்கிடும் நோக்கத்தில் பல கேமியோ கதாபாத்திரங்களைச் சேர்த்து பல கேள்விகளுடனேயே இந்தப் படத்தை முடித்திருக்கிறார்.
ஃபேண்டஸி விஷயங்களில் மட்டும் ஹாலிவுட் படங்களின் சாயல் ஹெவியாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ், இசை என அத்தனை தொழில்நுட்ப வேலைகளிலும் ஜொலிக்கும் இந்த முதல் பாகம் 'லோகா' யூனிவர்ஸை இன்னும் விரிவாக்கிட நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் விகடன் டிஜிட்டல் விமர்சனத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
ஓடும் குதிரை சாடும் குதிரை:
நடிகர் அல்தாஃப் சலீம் இயக்கும் இரண்டாவது படத்தில் ஃபகத் ஃபாஸில் கதாநாயகனாக வந்திருக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், லால் என ஜொலிக்கும் நட்சத்திரங்கள் பலரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கலகல டோனில் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார் ஃபகத் ஃபாஸில். இதுபோன்ற ரொமான்டிக் களத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபகத் வந்திருக்கிறார். டெம்ப்ளேட் கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறார்.
இவர்களைத் தாண்டி லாலும் கிரேஸி டோனில் படம் முழுக்க வந்து சிரிப்பூட்டுகிறார். ஆனால், இந்த காமெடி படத்தில் முதல் அரை மணி நேரத்திற்கு மேல் காமெடியுடன் சேர்ந்து படத்தின் கதையும் காணாமல் போய்விடுகிறது.
சோதிக்கும் முயற்சிகளாக எக்கச்சக்கமான கதாபாத்திரங்களையும் படத்தின் இறுதி வரை சேர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர். இந்த ஃபகத் ஃபாஸில் திரைப்படத்தின் முழு விமர்சனத்தையும் இங்கு க்ளிக் செய்து படியுங்கள்.

ஹ்ருதயபூர்வம்:
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், சங்கீத பிரதாப், மாளவிகா மோகனன், 'பூவே உனக்காக' சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் 'ஹ்ருதயபூர்வம்'.
தனது மகன் அகில் சத்யனின் கதையை, சத்யன் அந்திக்காடு ஃபீல் குட் திரைப்படமாகத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். பெரிதளவில் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வரும் இந்தப் படத்தின் விகடன் டிஜிட்டல் விமர்சனத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...