ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய க...
கேரளா: நடிகை உள்ளிட்டோர் பாலியல் புகார்; பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ; பின்னணி என்ன?
கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலக்காடு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் போட்டியிட்டு எம்.பி-ஆனார். அதைத்தொடர்ந்து பாலக்காடு சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த ராகுல் மாங்கூட்டத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
இந்த நிலையில் அவர்மீது சில இளம் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராகுல் மாங்கூட்டத்தில் மீது புகார்கள் கிளம்பின. ஒரு இளம் நடிகையிடம் கருவைக் கலைக்கும்படி ராகுல் மாங்கூட்டத்தில் வற்புறுத்தும் ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி இருந்தது.
அதைத்தொடர்ந்து நடிகை ரினி ஆன் ஜார்ஜ் என்பவர் ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை கொச்சியில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்குத் தவறான எண்ணத்துடன் அழைத்ததாகப் பேட்டி அளித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

இது பற்றி நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் வரை அந்த இளம் தலைவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். தவறான எண்ணத்துடன் எனக்கு நிறைய ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். அவர் இதுபோன்று பல பெண்களைத் தவறான எண்ணத்துடன் அணுகியுள்ளார். அவர்கள் தைரியமாகப் புகார் அளிக்க முன்வரவேண்டும்" என்றார்.
இந்த நிலையில் இளம்பெண்ணைக் கர்ப்பிணியாக்கிவிட்டு, கருவைக் கலைக்கும்படி வற்புறுத்திய ராகுல் மாங்கூட்டத்தில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஷின்றோ செபாஸ்டின் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே தன்மீது யாரும் சட்டரீதியாகப் புகார் அளிக்கவில்லை என ஏற்கனவே கூறிவந்த ராகுல் மாங்கூட்டத்தில் தனது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது பற்றி ராகுல் மாங்கூட்டத்தில் கூறுகையில், "நான் குற்றம் செய்ததால் ராஜினாமா செய்யவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய வலியுறுத்தவும் இல்லை. என்னைக் குறித்த விவாதத்தால் காங்கிரஸ் நிர்வாகிகளின் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். காங்கிரஸ் தலைவர்களின் நேரத்தை மதித்து நான் ராஜினாமா செய்கிறேன். புகார் கூறிய இளம் நடிகை என்னுடைய தோழியாவார். அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டு கூறியதாக நான் கருதவில்லை" என்றார்.

இதுகுறித்து நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறுகையில், "பெண்களுக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். அந்த நபர் திருந்த வேண்டும். பெண்கள் புகார் அளிக்க முன்வரும்போது சமூகம் அதை ஏற்றுக்கொண்டு, உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒரு தனிநபரைக் குறிப்பிட்டோ, ஒரு கட்சியைக் குறிப்பிட்டோ குற்றச்சாட்டு கூறவில்லை. ஆனால், அரசியல்கட்சி தலைவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை" என்றார்.