கே.எல்.ராகுலுக்கு ஏன் நாட் அவுட் கொடுக்கவில்லை; முன்னாள் இந்திய கேப்டன் கேள்வி!
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு கடைசி நாளில் 340 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான பார்ட்னர்ஷிப் போட்டியை டிரா செய்யும் நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்தது. இருப்பினும், ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தோல்வியைத் தழுவியது.
இதையும் படிக்க: ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை: இரு அணிகளின் கேப்டன்களும் பேசியது என்ன?
ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை
இந்தப் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த விதம் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. கள நடுவர் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுக்க மறுக்க, மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். ஸ்னிக்கோ மீட்டரில் எந்தவொரு அதிர்வும் காட்டவில்லை. இருப்பினும், ஜெய்ஸ்வால் பேட்டில் அல்லது கையுறையில் பந்து பட்டு விலகிச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தார்.
முன்னாள் கேப்டன் விமர்சனம்
பாக்ஸிங் டே டெஸ்ட்டின் கடைசி நாளில் முக்கியமான தருணத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாம் நடுவர் ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தை கண்டுகொள்ளாமல் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுத்தது தவறு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மூன்றாம் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொழில்நுட்பத்தை புறக்கணித்து ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பளித்திருக்கக் கூடாது. ஏனெனில், பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தபோது, மூன்றாம் நடுவர் கண்ணால் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு அவரது முடிவை வழங்கவில்லை. ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடனே அவுட் என தீர்ப்பளித்தார். ஆனால், ஜெய்ஸ்வால் விஷயத்தில் தொழில்நுட்பத்தை புறக்கணித்து எப்படி அவுட் என தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் இதனை புரிந்துகொள்ள வேண்டும்; எதைக் கூறுகிறார் ரோஹித் சர்மா?
மூன்றாம் நடுவர் என்பவர் ஒரு நாள் தொழில்நுட்பத்தின் உதவியோடும், அடுத்த நாள் கண்ணில் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டும் தீர்ப்பு வழங்க முடியாது. கண்ணால் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு, கள நடுவர் தீர்ப்பினை மூன்றாம் நடுவர் மாற்றக் கூடாது எனக் கூறுவேன். கள நடுவரின் முடிவை இவ்வாறு மூன்றாம் நடுவர் புறக்கணிக்கக் கூடாது. பந்து பேட்டில் படுவது போன்ற மாயை (ஆப்டிக்கல் இல்லூசன்), ஜெய்ஸ்வால் ஆட்டமிழப்பில் நடந்துள்ளது.
பந்து பேட்டுக்கு மிக அருகில் கடந்து செல்லும்போது, சில நேரங்களில் மெதுவாக நகருவது போலத் தோன்றும். அதனை பார்ப்பதற்கு பேட்டில் படுவது போன்று தெரியும். ஆனால், உண்மையில் பந்து பேட்டில் பட்டிருக்காது. அதன் காரணமாகவே ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்காக ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பம் இருக்கும் பட்சத்தில், மூன்றாம் நடுவர் அதன் அடிப்படையிலேயே முடிவை வழங்க வேண்டும். மூன்றாம் நடுவர் எவ்வாறு அவுட் கொடுத்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்றார்.