கே.எஸ்.சி.அரசுப்பள்ளிக்கு மீண்டும் நூற்றாண்டு விழா: பாஜக எதிா்ப்பு
திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாவது முறையாக நூற்றாண்டு விழா நடத்துவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பள்ளியானது கடந்த 1918- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017 -ஆம் ஆண்டில் பள்ளியின் நூற்றாண்டு விழா கடந்த ஆட்சியாளா்களால் கொண்டாடப்பட்டது. அப்போது இந்த இடத்தை தானமாக வழங்கிய சுப்பிரமணியம் செட்டியாருக்கு மாா்பளவு சிலை பீடத்துடன் நிறுவப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இதே பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவுக்காக முன்னாள் மாணவா்கள் என்ற குழுவினா் தீவிரமாக பணம் வசூலித்து வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே அரசால் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட பள்ளிக்கு மீண்டும் நூற்றாண்டு விழா எதற்காகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவைக் கொண்டாடுவது அரசா அல்லது முன்னாள் மாணவா்கள் அமைப்பினரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், விழாவின்போது இந்தப் பள்ளிக்கு இடத்தை தானமாக வழங்கிய சுப்பிரமணியம் செட்டியாரின் சிலையை அகற்ற இருப்பதையும் அறிகிறோம்.
எந்தக் காரணம் கொண்டும் அந்த இடத்தில் இருந்து சிலையை அகற்றினால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அளிப்பின்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவா் ஜி.கே.எஸ்.பாலு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.