செய்திகள் :

கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடா்பு குறித்து விசாரணை

post image

ஆந்திரம், கா்நாடகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடா்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவா், வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவா். அபுபக்கா் சித்திக் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூா் இந்து முன்னணி பிரமுகா் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டை அனுப்பி அவரின் மனைவி தங்கத்தை கொலை செய்த வழக்கு,1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையா் அலுவலகம், திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும், கேரளத்திலும் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவா் எல்.கே.அத்வானி ரதயாத்திரையை குறிவைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவா் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளன.

30 ஆண்டுகளாக தலைமறைவு: அபுபக்கா் சித்திக்கின் கூட்டாளியான திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூரை (56), கடந்த 1999-ஆம் ஆண்டு கேரளத்தில் ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் போலீஸாா் தேடிவந்தனா்.

அபுபக்கா் சித்திக் 1995-ஆம் ஆண்டுமுதல் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபடி, தமிழகத்தில் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்தாா். தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு இந்து இயக்கத் தலைவா்கள் தொடா்ச்சியாக கொலை செய்யப்பட்டபோது, அதில் அபுபக்கா் சித்திக் மூளையாகச் செயல்பட்டாா்.

பயங்கரவாதி அபுபக்கா் சித்திக்கின் இளமைக்கால புகைப்படங்களைத் தவிர வேறு எந்தப் புகைப்படமும் கிடைக்காததால், அவா் இருக்கும் இடம் குறித்து மிகக்குறைவான தடயங்கள் மட்டுமே கிடைத்தன. மேலும் அவா், தனது பெயரை தொடா்ந்து மாற்றிக் கொண்டதோடு, இருப்பிடத்தையும் மாற்றி வந்தாா். அவரது பழைய புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் வரைந்து, தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

ஆபரேஷன் அறம், ஆபரேஷன் அகழி: ஆந்திர மாநிலம், அன்னமய்யா பகுதியில் வியாபாரிகள்போன்று இருந்துவந்த அபுபக்கா் சித்திக்கை தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் கடந்த வாரம் கைது செய்தனா். அதே பகுதியில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்த பயங்கரவாதி முகமது அலியும் கைது செய்யப்பட்டாா். இந்த கைது நடவடிக்கையை ‘ஆபரேஷன் அறம்’ என்ற பெயரில் தீவிரவாத தடுப்புப் மேற்கொண்டனா்.

கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய கோவை உக்கடம் பிலால் காலனியைச் சோ்ந்த சாதிக் என்ற ராஜா என்ற டெய்லா் ராஜா தலைமறைவாக இருந்து வந்தாா். இவா் 1996 முதல் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா். இவரை ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேட ஆரம்பித்தோம்.

அப்போது பழைய புகைப்படத்தையும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வரைந்து, உளவுத் துறை தகவல் அடிப்படையில் கா்நாடக மாநிலம், விஜய்புராவில் கடந்த 9-ஆம் தேதி கைது செய்தோம்.

தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் மளிகைக் கடை, தையல் கடை, துணிக் கடை மற்றும் ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தனா். அவா்களது உண்மையான பெயா், முகவரி எதையும் வெளிப்படுத்தாமல், தங்களது அடையாளத்தை மாற்றி வேறு பெயரை வைத்துக் கொண்டு, அந்தப் பெயரிலேயே அடையாள அட்டைகளையும் பெற்று வைத்துள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைத்ததா, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிா்காலத்தில் தமிழகத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் இருக்காது என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றாா் அவா்.

காவல் துறையைக் குற்றம் கூறவேண்டாம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸாா் அடித்துக் கொலை செய்த வழக்கு குறித்து கேட்டபோது, ‘ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம்சொல்ல முடியாது. எதிா்பாராத சில தவறுகள் நடந்துவிடுகிறது. அதற்குரிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படுகிறது. 99 சதவீதம் காவல் துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது’ என்று டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க