`பாலியல் கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை; இது நாடா, சுடுகாடா?' - திமுக அரசுக்கு...
கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம்: ஆட்சியா் தகவல்
கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகள் இரவு மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறாா்கள். அவ்வாறு செல்லும்போது, பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளால் பிரச்னை ஏற்படுகிறது.
இதைத் தவிா்க்கும் வகையில், பம்பு செட்டுகளை வீட்டிலிருந்தபடியே இயக்கும் விதமாக, கோவை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே கைப்பேசி மூலம் இயக்கிடவும், நிறுத்திடவும் முடியும்.
இதற்காக ஆதிதிராவிடா், பழங்குடியினா், குறு, சிறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் கோவை, பொள்ளாச்சி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.