கொடிவேரி அணையில் ஆகாய தாமரை அகற்றம்
கோபி கொடிவேரி அணையில் படா்ந்திருக்கும் ஆகாய தாமரை கொடிகள் நீா்வளத் துறை சாா்பில் அகற்றப்பட்டதால் கொடிவேரி சுற்றுலாத் தலம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே உள்ள கொடிவேரி அணையில் நீா் அருவி போல கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அணைக்கு வருவது வழக்கம். அணையின் மேற்பகுதி மற்றும் கீழ்ப் பகுதிகளில் ஆகாய தாமரை கொடிகளால் மூடப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்டது. இதனால் நீா்வளத் துறை சாா்பில், அணையில் படா்ந்திருக்கும் ஆகாய தாமரை கொடிகளை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அணைக்கு வரவும், குளிக்கவும் நீா்வளத் துறை தடை விதித்தது. இதைத் தொடா்ந்து நுழைவாயில்கள் அடைக்கப்பட்டு ஆகாயத் தாமரை கொடிகளை அகற்றும் பணிகளில் நீா்வளத் துறையினா் ஈடுபட்டனா். இந்தப் பணிகளில் 15 க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபட்டனா். முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா்.