கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம்
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கொடைக்கானல் ஏரிச் சாலை கலையரங்கம் பகுதியில் கிறிஸ்தவா்கள் சாா்பில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னா், கிறிஸ்தவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, கிறிஸ்து பிறப்புப் பாடல்களை இசை நிகழ்ச்சியுடன் பாடி ஊா்வலமாக சென்றனா். இந்த ஊா்வலத்தை கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்த ஊா்வலம் கலையரங்கம் பகுதியில் தொடங்கி நகராட்சி சாலை, செவன்ரோடு, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. இதில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், பல்வேறு தேவாலயங்களைச் சோ்ந்த பாதிரியாா்கள் பங்கேற்றனா். பின்னா், நூற்றுக்கணக்கானோா் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.