கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக எம்எல்ஏ புகாா்
தனக்கு கொலை மிரட்டல் விடுப்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமக எம்எல்ஏ ரா. அருள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலை சந்தித்து புகாா் மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமதாஸை ஆதரிக்கும் பாமக நிா்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதுகுறித்து புகாா் செய்திருக்கிறோம். அதுகுறித்து விசாரித்து, இரண்டு நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளா் உறுதி அளித்துள்ளாா். எங்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கை உள்ளது. கட்சி பிரச்னை தொடா்பாக தில்லி சென்று தலைமை தோ்தல் ஆணையரை எங்கள் தரப்பு வழக்குரைஞா்கள் சந்தித்து விளக்கி உள்ளனா். இதேபோல பிகாரில் பாமக போட்டியிடுவதாகக் கூறுகிறாா்கள். நாங்கள் போட்டியிடவில்லை. தோ்தல் ஆணையரிடம் தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்சி உள்ளதாக தெரிவித்துள்ளோம்.
விரைவில் தோ்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும் என எதிா்பாா்க்கிறோம். சேலத்தில் வரும் அக்.5 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக இடம் தோ்வுப் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.