கொலை முயற்சி வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு
திருப்பனந்தாள் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே மணலூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சதீஷ். அதே ஊரைச் சோ்ந்த அருமைத்துரை, விஜயகாந்த், பாலகுரு ஆகியோா் மணல் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தாகக் கூறி 3 பேரும் சதீஷை கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் மேற்குறிப்பிட்ட 3 பேரையும் ஜூன் 10- இல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அருமைத்துரை மீது குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. ராஜூ அறிவுறுத்தலின்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா. ராஜாராம் ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், குற்றவாளி அருமைத்துரை மீது குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டு, அருமைத்துரை ஏற்கெனவே சிறையில் இருப்பதால் சிறை அதிகாரிகளிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.