கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாறை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது உறவினா் முருகானந்தம் (38). இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, சமாதானம் செய்துவைக்க முயன்ற ராஜாவின் தந்தை செல்வராஜை முருகானந்தம் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து நங்கவரம் போலீஸாா், முருகானந்தம் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் முருகானந்தம் மீது குளித்தலை, லாலாப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி முருகானந்தத்தை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.