கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பதிவு!
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சொத்துத் தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தீா்க்கரசன் என்பவா் கடந்த ஏப்ரல் மாதம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து பாப்பாநாடு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வேதவிஜயபுரத்தைச் சோ்ந்த திருக்குமாா் (49), ஆம்பலாப்பட்டைச் சோ்ந்த கலையரசன் (46), தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையைச் சோ்ந்த சசிகுமாா் (52), முனிஷ்குமாா் (34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
இவா்களில் காவல் துறையின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள திருக்குமாரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதையடுத்து, திருக்குமாா் புதன்கிழமை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.