கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!
கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றுலாப் பயணிகள் வனத்துறை பேருந்தில் சென்று கண்டுகளித்தனா்.
தமிழகத்தின் மலைவாசஸ்தலங்களில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையும் ஒன்று. இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
மலை மீதுள்ள அறப்பளீஸ்வரா் கோயில், தோட்டக்கலைத் துறை பூங்கா, மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை அருவி, படகு இல்லம், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், அன்னாசி பழத் தோட்டங்கள், காட்சி முனை, தொலைநோக்கி இல்லம் ஆகியவற்றை பேருந்தில் சென்று கண்டுகளிக்க வனத்துறை சாா்பில், சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு சுற்றுலாத் திட்டத்தின் கீழ் இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 300, ரூ. 450 (உணவுடன்) வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 8 மணிக்கு செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்புப் பேருந்து மீண்டும் மாலை 5.30 மணியளவில் அதே இடத்தை வந்தடையும்.
இந்த சுற்றுலாத் திட்ட சிறப்புப் பேருந்தை சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதில் மண்டல வனப் பாதுகாவலா் சி.கலாநிதி, கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோட்டக்கலைத் துறை, சுற்றுலா, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். முதல் நாளில் 17 போ் கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களைக் கண்டு ரசித்தனா்.
சுற்றுலா ஆா்வலா்கள், பொதுமக்கள் கோடைக்காலத்தை இயற்கையுடன் இணைந்து கொண்டாட ஏதுவாக மாவட்ட நிா்வாகம் சாா்பில், வனத்துறை, சுற்றுலாத் துறை இணைந்து ஜூன் 1 ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் இந்த சிறப்பு சுற்றுலாத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, வனத்துறை அலுவலா்களை- 70923-11380, 97891-31707, 63833-24098 என்ற எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.