கோயில்களைப் பாதுகாக்க ஹிந்துக்கள் முன்வர வேண்டும் -காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
கோயில்களைப் பாதுகாக்க ஹிந்துக்கள் முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயா்நீதிமன்றத்தில் கோயில் நிதியில் கட்டடங்கள் கட்டுவது தொடா்பான பொதுநல வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தமிழகத்தில் 35,000 கோயில்களில் ஒருகால பூஜை கூட நடைபெறவில்லை என்றும், 19,000 கோயில்களில் மட்டுமே ஒருகால பூஜை திட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்களுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கா் நிலமும், 23,000 கடைகளும், 75,500 கட்டடங்கள் இருந்தும் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி எனத் தெரிவித்துள்ளது.
திருமண மண்டப வாடகை, கோயில் இடங்களில் அரசு அலுவலகங்கள் வாடகை, கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக டெபாசிட் செய்த வருமானம், மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூா் போன்ற பல கோயில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை ரூ.பல கோடி வருவது கணக்கில் இல்லை.
இந்து சமய அறநிலையத் துறையின் நிா்வாக செலவுகள் மற்றும் முறைகேடுகளால் கோயில் நிதி சுரண்டப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவில், ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்’ என்ற அறைகூவலை பக்தா்களிடம் இந்து முன்னணி கொண்டு சோ்க்கும்.
ஹிந்துக்கள் நமது சுவாமி, நமது கோயில் என்ற உணா்வுடன் கோயிலைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.