கோயில் திருவிழா நடத்துவதில் பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 70 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சோ்ந்த 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் பொன்னியம்மன், சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனா். மற்றொரு தரப்பினா் திருவிழா நடத்த எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்படும் என்பதை அறிந்த வட்டாட்சியா் கடந்த 1-ஆம் தேதி சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பசுபதி தலைமையில் சனிக்கிழமை மீண்டும் அமைதிக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரிடமும் கோயில் திருவிழா நடத்தக் கூடாது என வட்டாட்சியா் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினா் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை இரவு சுமாா் 7.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த பானையங்கால் கிராம மக்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் தனியாா் உணவம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் அங்கு சென்று அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.